காப்பீட்டுத் திட்டத்தில் முழுமையாக பயன்பெற முடியவில்லை: தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸார் ஆதங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் போலீஸாரின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுமையாக பயன்பெற முடியாத நிலைக்கு போலீஸார் தள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இப்பேரிடர் காலத்தில், முன்களப் பணியாளர்களாக பணியாற்றும் போலீஸார், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை செல்ல நேர்ந்தால், ‘நியூ ஹெல்த் இன்சூரன்ஸ்’சில் 60 சதவீதம்மட்டும் தரப்படும். எஞ்சிய தொகையை போலீஸாரே செலுத்த வேண்டும் என கூறுகின்றனர்.

அதேபோல, தனியார் மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு அட்டையை முன்கூட்டியே காண்பிக்க வேண்டும். கரோனா தொற்றால்பாதிக்கப்பட்ட காவலர்கள் மற்றும்அவர்களது குடும்பத்தினர், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதும், தனியார் மருத்துவமனை தரப்பில் ரூ. 50,000 கட்ட வேண்டும் என்கின்றனர். அவசர நேரம் என்பதால், பணத்தைக் கட்டிய பின்னர், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை வராது என தனியார் மருத்துவர்கள் மறுக்கின்றனர்.

கட்டணக்கொள்ளை

கடந்த அக்டோபர் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸார், காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்தும், இதுவரை அவர்கள் செலவழித்த தொகை வந்து சேரவில்லை. தனியார் மருத்துவமனைகள் கரோனா தொற்றைப் பயன்படுத்தி, பெரும் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நிலையில், போலீஸாரும் கட்டணக் கொள்ளையில் சிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

காப்பீட்டுத் துறையினர் கூறியதாவது: கரோனா சிகிச்சையில், மிகவும் சாதாரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு தினமும் ரூ. 5,000, மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.7500, அதையும் தாண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு ரூ. 9,500வரை மத்திய, மாநில அரசு ஊழியர்களின், தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனை அபரிமிதமாக வசூலிக்கும் தொகை, நாங்கள் கணக்கில் எடுப்பதில்லை.

அதேபோல, இத்தனை சதவீதம் என்று, எங்கும் நிர்ணயம் செய்யவில்லை. நுரையீரல்பாதிப்பு உள்ளிட்ட மருத்துவ ஆவணங்களை பரிசோதித்துதான் பாதிக்கப்பட்ட நபருக்கு காப்பீட்டுக்கான தொகை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், எங்களது 18002335666 தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in