ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. கரோனா உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ரெம்டெசிவிர், ஆக்சிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு மற்றும் கரோனா தொடர்பான பொதுநல வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று நடந்தது.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, கரோனா சிகிச்சைக்கான படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்தை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து நடந்த வாதம் வருமாறு:

மனுதாரர்கள் தரப்பு: கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அரசு தரப்பில் குறைத்து காட்டப்படுகிறது. ஊரடங்கு கடுமையாக்கப்படாததால் சாலைகளில் பலர் வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிகின்றனர். பாதிக்கப்படும் குழந்தைகள் விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற உத்தரவிட வேண்டும்.

அரசு தலைமை வழக்கறிஞர்: இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஊரடங்கு காலகட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன்: இன்னும் ஒரு மாதத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு வாதம் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

கரோனா பரிசோதனைகளை குறைக்கக் கூடாது. உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரங்களை முறையாக, நேர்மையாக வெளியிட வேண்டும். அப்போதுதான், வரும் நாட்களில் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகளைப் பெற உதவியாக இருக்கும். கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை மருத்துவமனைகளிலேயே வைத்திருப்பது மற்ற நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால், உரிய விதிகளை பின்பற்றி உடனே அப்புறப்படுத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் சடலங்களை கண்ணியமாக கையாள வேண்டும்.

தடுப்பூசி விநியோகம் போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசி முகாம்கள் தொடங்குவது ஸ்தம்பித்துள்ளது. எனவே, வெளிநாட்டு மருந்து இறக்குமதிக்காக காத்திருக்காமல், உள்நாட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

இஎஸ்ஐ உறுப்பினர்களின் நிதி மூலமாக இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்படுத்தப்படுவதால் அங்கு கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க முடியும். ஆனால், அவற்றை தடுப்பூசி மையங்களாக பயன்படுத்தலாம்.

தமிழகத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நல்ல முடிவுகளை தருகிறது என்றாலும், அதை மேலும் கடுமையாக்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள், முதியவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை வழங்குவது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கூறிய நீதிபதிகள் விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in