

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ரமணன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டிருந்தது. இதனால் கடந்த கடந்த 4 நாள்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கன மழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வியாழக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாறியுள்ளது. இதனால் கடோலர மற்றும் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
கடலூர், காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கன மழையும் சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் மழையும், கன மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு ரமணன் தெரிவித்தார்.
கடந்த 1-ம் தேதி நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் 33 செ.மீ., தாம்பரத்தில் 49 செ.மீ. மழை பெய்தது. சென்னையில் கடந்த இரு நாட்களாக சற்று ஓய்ந்திருந்தது. இன்று காலை நிலவரப்படி கடலூரில் 13 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 12 செ.மீ., பெரியார் அணைப் பகுதியில் 11 செ.மீ., புதுச்சேரி 7 செ.மீ., சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.