

கரோனா தடுப்பில் முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டுள்ள போலீஸார், ஒரே அளவீட்டால் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் ஏக்கத்தில் உள்ளனர்.
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதேபோல, சில சிக்கன நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருவதால், இதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே, 2022 மார்ச் 31-ம் தேதி வரை மேலும் ஒராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்திவைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
இந்த உத்தரவு அரசின் அனைத்து அமைப்புகள், கழகங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், சங்கங்களுக்குப் பொருத்தும் என அரசு உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இந்த உத்தரவு அரசுத் துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், காவல் துறையினர் மத்தியில் வருத்தத்தையும், மன வேதனையையும், விரக்தியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தடுப்பு பணியில் மருத்துவப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்களுடன் காவல் துறையினரும் ஒருங்கிணைந்து, முன்களப் பணியாளர்களாக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், காவல் உயரதிகாரிகள் முதல், இரண்டாம் நிலை காவலர்கள் வரை ஆயிரக்கணக்கான போலீஸார் பாதிக்கப்பட்டனர். உயிரழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
தொற்றிலிருந்து மீண்ட போலீஸார், மீண்டும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்தான், ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்திவைப்பு என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இது போலீஸாருக்கு மனச் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ``காவல் துறையினர் வழக்கமான பணிகளை கவனிக்கிறோம். மேலும், கரோனா தடுப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டோம். ஆனால், அரசின் சில துறைகளைச் சேர்ந்தவர்கள் வழக்கமான பணிகளை செய்யவில்லை. சிலர் வீட்டில் இருந்தபடி தங்கள் குடும்பத்தினரை கவனித்துக்கொண்டு, ஆன்லைன் வழியே குறிப்பிட்ட நேரம் மட்டுமே பணி செய்கின்றனர். அதுவும்போக, பள்ளிகள் பெரும்பாலும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த விடுமுறைகளயும் அவர்கள் அனுபவித்தனர்.
விடுப்புகூட கிடையாது..
நடந்து முடிந்த தேர்தல் வாக்குப்பதிவின்போதும், வாக்கு எண்ணிக்கையின்போதும் சில அரசுப் பணியாளர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணிகளைத் தவிர்த்து, வீட்டில் ஓய்வெடுத்தனர். எங்களுக்கு விடுப்பு எடுக்கக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால் ஒரே அளவீடாக, ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி அனைவருக்கும் வைக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இதுஒருபுறம் இருக்க, முறையாக கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகூட காவல் துறையைச் சேர்ந்த சிலருக்கு சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. இதுகுறித்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டியவர்களும் சுணக்கம் காட்டுகின்றனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அவர்கள் சங்கம் மூலம் தீர்வுக்காக போராடுகின்றனர். ஆனால், காவல் துறையைச் சேர்ந்த நாங்கள் சங்கம் அமைத்துக்கொள்ள முடியாது. எங்களது பிரச்சினைகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வது எளிதல்ல. இதனால், அரசின் பிரதிபலன்களும் காவல் துறையினருக்கு முறையாக கிடைப்பது இல்லை.
எனவே, கரோனா தடுப்பு பணியில் முன்கள வீரர்களாக உள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு அரசு அண்மையில் ஊக்கத்தொகை அளித்ததுபோல, காவல் துறையினருக்கும் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஊதியத்தை காவல் துறையினருக்கு மீண்டும் வழங்க வேண்டும். இன்னும் சில சலுகைகளையும் வழங்க வேண்டும்.
இதன் மூலம் மீண்டும் உற்சாகத்துடன், மக்களுக்கு சேவையாற்ற முடியும். பிற துறையினரை குறை சொல்லும் நோக்கில் இதை தெரிவிக்கவில்லை. அரசு ஊழியர்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் ஆதங்கம்'' என்றார்.