

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆவடி, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைகளில் நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ள, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆவடி, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் முழு கவச உடை அணிந்து, ஆவடி அரசு மருத்துவமனையில் உள்ளகரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அவர், மருத்துவமனையில் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளதா? நோயாளிகளுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் சரி வர வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். பிறகு, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அவர், கும்மிடிப்பூண்டி நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அருகில் அமைக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கும் பணிகள் குறித்தும், பெரியபாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும்சிகிச்சை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், ஆவடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையை பார்வையிட்ட அமைச்சர், மக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சந்தையில் காய்கறிகளை வாங்கிச் செல்வதை உறுதி செய்யவேண்டும் என, வியாபாரிகளை அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது :
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய1,480 படுக்கைகளும், அரசு சார்பில் ஆக்சிஜனுடன் கூடிய 480 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.
ஆவடி அரசு மருத்துவமனையில், கரோனாபாதித்தவர்களுக்கு 50 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள 10 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 40 படுக்கைகளும் ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும். பொதுமக்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்றி கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆவின் பால் கொள்முதலையும், விற்பனையையும் சீராக செய்து வருகிறோம். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு இடையே காணொலி மூலம் அடிக்கடி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, குடும்பநலம் மற்றும் ஊரகநலப் பணிகளுக்கான இணை இயக்குநர் ராணி, சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர்லால், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், ஆவடிமாநகராட்சி ஆணையர் நாராயணன், மாவட்டஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி,கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.