

இரவு, பகல் என்று பாராமல் கடுமையாக உழைக்கும் சென்னை மாநகர துப்புரவுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், "சென்னை மாநகராட்சியில் வெள்ளம் வடிந்த இடங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக மாநகராட்சி துப்புரவுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
வெளிமாவட்டங்களிலிருந்து 2,000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிப் பகுதியில் தற்பொழுது 25,000 துப்புரவுப் பணியாளர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குப்பைகளை விரைந்து அகற்றும் பொருட்டு மேலும் 5,000 துப்புரவுப் பணியாளர்கள் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்படுவர்.
மேலும், தேவைக்கேற்ப சென்னை மாநகரத்தில் துப்புரவுப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அவர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் வழங்கப்படும். இந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக பணியாற்ற விரும்புவோர் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை மாநகர துப்புரவுப் பணியாளர்கள் கடந்த பல நாட்களாக குப்பைகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் என்று பாராமல் கடுமையாக உழைக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.