

அணு உலைக்கு எதிராக போராடி வரும் முகிலன், 10 வழக்குகள் தொடர் பாக திருச்சி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே யுள்ள சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன் (43). கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் பொறுப்பாளர்களில் ஒருவரான இவர் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது, வெடிகுண்டு வீசியது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது, கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 2012, 2013-ம் ஆண்டுகளில் கூடங்குளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 10 வழக்குகள் தொடர்பாக முகிலன் நேற்று திருச்சி மாவட்ட 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வரும் ஜனவரி 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறும், அதற்குபிறகு வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் மாஜிஸ்திரேட் முரளிதரன் கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.