

மதுரையில் கரோனா தடுப்பூசி போடத் தகுதியுடைய அனைவரையும் தடுப்பூசி போட வைப்பதே தனது இலக்கு என புதிதாக பொறுப்பேற்ற அரசு மருத்துவமனை புதிய டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையின் புதிய டீனாக சிவகங்கை அரசு மருத்துவமனை டீனாக பணிபுரியும் ரத்தினவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் மதுரை அரசு மருத்துவமனையில் இருதய மருத்துவ சிகிச்சைத்துறை தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்நிலையில், இவர், மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’னாக வருவதற்கு கடந்த ஒரு ஆண்டாகவே பல்வேறு முயற்சிகளை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது..
ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் ‘டீன்’ சங்குமணி செல்வாக்காகவே இருந்துவிட்டதால் ரத்தினவேலால் மதுரைக்கு வர முடியவில்லை. இந்நிலையில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தற்போது மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் டீனாக மருத்துவர் ரத்தினவேல் பொறுப்பேற்றுள்ளார்.
பதிவியேற்ற பின்னர் அவர், "மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீனாக நான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளேன். என் முன் சில முக்கியப் பணிகள் அணிவகுத்து நிற்கின்றன. முதலில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை கரோனாவின் கோரப்பிடியிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீட்க வேண்டும். மதுரை மக்கள் மத்தியில் நிலவும் கரோனா பீதியைப் போக்க வேண்டும். மதுரை மக்கள் மத்தியில் 100 சதவீத தடுப்பூசியின் பலனை கொண்டு சேர்க்க வேண்டும். தடுப்பூசி மட்டுமே இப்போதைக்கு கரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதம். மதுரை பல்நோக்கு மருத்துவமனையில் மற்ற பல்நோக்கு மருத்துவ சேவைகளையும் விரைவில் மக்களுக்கு வழங்க வேண்டும். இவற்றை நிறைவேற்ற தங்கள் அனைவரின் உதவியையும், ஒத்துழைப்பையும் நாடுகிறேன்" எனக் கூறினார்.