Published : 17 May 2021 09:24 PM
Last Updated : 17 May 2021 09:24 PM

பிற மாவட்டங்களை இணைக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இ-பதிவு ஆய்வில் காவல்துறையினர் தீவிரம்

தமிழக - கேரளா எல்லையான, கோவையை அடுத்த வாளையாறு எல்லை சோதனைச் சாவடியில், கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்களின் இ-பதிவு ஆவணத்தை இன்று சரிபார்க்கும் காவல்துறையினர். படம் : ஜெ.மனோகரன்.

கோவை

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட எல்லைகளில் உள்ள 16 சோதனைச் சாவடிகளிலும், -பதிவு தொடர்பாக காவல்துறையினர் இன்று ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவதற்கும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கும், மாவட்டத்துக்குள் உள்ளேயே செல்வதற்கும் இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு இன்று (மே 17) முதல் நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து கோவையில் மாநகர், புறநகரப் பகுதிகளில் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரமாக இருந்தது.

குறிப்பாக, கோவையில் உள்ள மாவட்டங்களை ஒட்டியுள்ள சோதனைச் சாவடிகள், பிற மாநில எல்லையை ஒட்டியுள்ள சோதனைச் சாவடிகளில் இ-பதிவு ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக கோவை மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ மாவட்டப் பகுதியில் வாளையாறு, வேலந்தாவளம், நடுப்புணி, மாங்கரை, காங்கேயம்பாளைம், தெக்கலூர் உள்ளிட்ட 16 இடங்களில் நிரந்தர சோதனைச் சாவடிகள் உள்ளன.

இங்கு ஒரு சோதனைச் சாவடியில் குறைந்தபட்சம் 5 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 சோதனைச் சாவடிகளிலும் இன்று முதல் இ-பதிவு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்களில் வருபவர்களிடம் இ-பதிவு உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. முதல் நாள் என்பதால், அவ்வளவு கெடுபிடிகள் காட்டப்படவில்லை. -பதிவு செய்யாமல் வந்தவர்களும், எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டனர்.

நாளை (மே 18) முதல் கண்காணிப்புப் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும். அதேசமயம் வாளையாறு, வேலந்தாவளம் ஆகிய கேரளாவை ஒட்டியுள்ள சோதனைச் சாவடிகளில் இ-பதிவு கண்காணிப்பு கடந்த சில வாரங்களாக நடைமுறையில் உள்ளதால், அங்கு முன்னரே ஒரு ஷிப்ட்டுக்கு 5 காவலர்கள் நியமிக்கப்பட்டு வழக்கம் போல் கண்காணிப்புப் பணியி்ல் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றனர்.

கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ மாநகர எல்லையில் 11 நிரந்தர சோதனைச் சாவடிகள் உள்ளன. 25-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள காவலர்களும், மாநகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களும், மாநகருக்குள் சாலைகளில் வரும் வாகன ஓட்டுநர்களை தடுத்து நிறுத்தி இ-பதிவு தொடர்பாக விசாரிக்கின்றனர்.

-பதிவு வைத்துள்ளவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். -பதிவு இல்லாதவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது.

மேலும், எவ்வாறு இ-பதிவு செய்வது என்பது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. நாளை முதல் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x