

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு, 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி.விஜயகுமார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 654 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 15,428 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்தவர்களில் 2 பேர் இன்று உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது. 3,136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 550 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களின் 187 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
இந்நிலையில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது.
மே 10-ம் தேதி முதல் எஸ்பி.விஜயகுமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் 750 போலீஸார் தீவிர கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பத்தூர் எஸ்பி.விஜயகுமார் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது, ‘மே 10-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் நேற்று ஒரே நாளில் விதிமுறைகளை மீறிய 200 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து, தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வரவேண்டாம். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.