

‘‘அரசு ஊழியர்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் பணிபுரிகிறார்கள். ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்,’’ என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆய்வுக்கூட்டத்தில் உருக்கமாகப் பேசினார்.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், இன்று மதுரை மாநகராட்சியில் நடந்தது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் ஹர்மந்தர்சிங், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், திருநெல்வேலி ஆணையாளர் கே.பாஸ்கரன், தூத்துக்குடி ஆணையாளர் சரண்யாஹரி, நாகர்கோவில் ஆணையாளர் ஆஷாஅஜீத், திண்டுக்கல் ஆணையாளர் கே.பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகளுக்கு அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு பற்றியும், ஏதேனும் அதில் இடையூறுகள் இருக்கிறதா என்பது குறித்தும், ஏற்படும் இடையூறுகளை நீக்கி முழுமையாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைத்து பொதுமக்களை கரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைச்சர்கள் ஆலோசனை வழங்கினர்.
அமைச்சர் நேரு பேசுகையில், ‘‘ஊரடங்கு அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது நோக்கம். ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு அமைச்சர் பெரும் பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏற்கெனவே உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து மதுரை மாவட்டத்திற்கு தேவையான அளவு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்குவதற்கும் தொடர் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
மூன்றாவது அலை வந்தால் அதனை சமாளிக்கக்கூடிய முயற்சிகளை செய்து வருகிறோம்.
10 மணிக்கு மேல் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களே தாங்களே பாதுகாத்து கொள்வது குறித்து அரசு பிரச்சாரம் செய்து வருகிறது.
தடுப்பு ஊசி கிடைக்கப்பெற்றவுடன் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு போடப்படும்.
ரெம்டெசிவர் மருந்து தேவையில்லாதவர்கள்கூட வரிசையில் நின்று பெற்று கள்ளசந்தையில் விற்கும் நிலையை தடுக்கும் வகையில் மாற்று நடவடிக்கையாக தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கும் முறையை முதல்வர் எடுத்துள்ளார்.
அரசு அலுவலர்கள் அனைவரும் தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.