

புதுச்சேரியில் கரோனாவுக்கு ஒரே நாளில் 28 பேர் பலியானார்கள். இறப்பு தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளதுடன், இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி முழுக்க 14 லட்சம் மக்கள்தொகை உள்ள சூழலில் இறப்பு விகிதமோ தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் தொடர்ந்து உள்ளது. இறப்பு தொடர்ந்து புதுச்சேரியில் உச்சத்திலேயே உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 8,056 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 1,210, காரைக்கால் – 147, ஏனாம் – 78, மாஹே – 11 பேர் என மொத்தம் 1,446 பேருக்கு கரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் 28 பேர் கரோனா தொற்றுக்கு இன்று பலியாகி உள்ளனர். இவர்களில் 18 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,179 ஆகவும், இறப்பு விகிதம் 1.37 ஆகவும் அதிகரித்துள்ளது.
தற்போது ஜிப்மரில் 515 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 438 பேரும், கோவிட் கேர் சென்டரில் 662 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 15,281 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 17,383 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 1,701 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 67,390 (78.40 சதவீதம்) ஆக உள்ளது.