

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மக்களை மிரட்டிய மழை நின்று வெள்ள அபாய சூழல் நீங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விளைநிலங்கள், சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிந்து 4 நாட்களுக்கு பின்பு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
டவ் தே புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை கனமழை கொட்டியது. மழையுடன் சூறைகாற்றும் வீசியதால் வாழை, ரப்பர் உட்பட விளைநிலங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்வரத்து அதிகரித்ததால் பேச்சிப்பாறையில் இருந்து 4 ஆயிரம் கனஅடிக்கு மேல் திறந்து விடப்பட்ட தண்ணீர் திற்பரப்பு அருவி, மற்றும் தாமிரபரணி ஆற்றின் வழியாக மழைநீருடன் கலந்து ஓடியதால் வெள்ள அபாய சூழல் நிலவியது. கரையோர பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீயணைப்பு மீட்பு துறையினர் 18 குழுக்களாக பிரிந்து தாழ்வான பகுதிகளில் மீட்பு பணிக்கு தயாராக இருந்தனர்.
குழித்துறை, திக்குறிச்சி பகுதிகளில் வீடுகள், தெருக்களில் வெள்ளம் சூழ்ந்தன. குமரி மாவட்டத்தில் ஆறு, கால்வாய் ஓரம் உள்ள சாலைகள் மழைநீரால் மூழ்கின. இதனால் ஊரடங்கு நேரத்தில் பாதிப்பு பெரிதாக இல்லை என்றாலும் மக்கள் பீதிக்குள்ளாகும் நிலையில் தொடர் மழை மிரட்டியது. கடந்த 5 நாட்களாக குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை மீனவ கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டு சேதங்கள் நிகழ்ந்தன. மழைக்கு 2 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
குமரி மாவட்டம் முழுவதும் மிரட்டி வந்த கனமழை நேற்று மதியத்தில் இருந்து குறைந்தது. இன்று மழை ஏதும் இன்றி மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தது. இதனால் விளைநிலங்கள், சாலைகளில் தேங்கிய தண்ணீர் வடிய தொடங்கியது. மழை பாதிப்பின் அச்சத்தில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்ச மழையே புத்தன் அணையில் 37 மிமீ., என பதிவாகியிருந்தது.
குழித்துறையில் 24, பேச்சிப்பாறையில் 36, சுருளகோட்டில் 31, குளச்சலில் 34, அடையாமடையில் 26 மிமீ., மழை பெய்திருந்தது.
மலையோர பகுதிகளிலும் மழை இல்லாாததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் குறைந்தது. வெள்ள அபாய எச்சரிக்கையில் இருந்த பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்தாக 1404 கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது குறைக்கப்பட்டது.
நீர்மட்டம் 43.05 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 755 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 62.30 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 1416 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது.
சிற்றாறு ஒன்றில் 11.87 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு 170 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. சிற்றாறு 2 அணையில் 11.97 அடி தண்ணீர் உள்ள நிலையில் 237 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டமும் 7.5 அடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.