கரோனா சிகிச்சை முடிந்தது: முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி திரும்பினார்

அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் சாமி கும்பிடச் சென்ற ரங்கசாமி.
அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் சாமி கும்பிடச் சென்ற ரங்கசாமி.
Updated on
1 min read

கரோனா சிகிச்சை முடிந்து புதுச்சேரிக்கு முதல்வர் ரங்கசாமி இன்று மாலை திரும்பினார். எல்லையில் அவரது காருக்கு முன்பு தேங்காய் உடைத்து அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். தமிழகத்தைப் போல் நிவாரணம் அறிவிப்பாரா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதுவை முதல்வராக ரங்கசாமி கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். அதையடுத்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் 9-ம் தேதி அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தொற்று உறுதியானது. இதனால் அன்றைய தினமே சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார்.

தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ரங்கசாமி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து குணமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து புதுவைக்கு இன்று மதியம் புறப்பட்டார்.

சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு இன்று மாலை புதுச்சேரிக்கு வந்தபோது, எல்லையில் சுங்கச்சாவடி அருகே காத்திருந்த ஆதரவாளர்கள் ரங்கசாமி கார் முன்பாக தேங்காய் உடைத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் நேராக அவரது வீட்டுக்கு வந்தார். தெருவில் அவரது ஆதரவாளர்கள் வரிசையாக நின்று வரவேற்றனர்.

வீட்டு வளாகத்தில் உள்ள கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி கும்பிட்டார். பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள தனது வீட்டில் ரங்கசாமி தனிமைப்படுத்திக் கொண்டார். டாக்டர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரம் தனிமையில் ஓய்வில் இருக்கும்படி அவரை அறிவுறுத்தியுள்ளனர்.

நிவாரணம் அறிவிப்பாரா ரங்கசாமி?

புதிய அரசில் ரங்கசாமி மட்டுமே முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் அமைச்சர்கள் யார்? என முடிவாகவில்லை. எம்எல்ஏக்களும் இதுவரை பதவியேற்கவில்லை. மேலும், புதுவையில் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு காரணமாக புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தைப் போல் கரோனா நிவாரணம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in