Published : 17 May 2021 04:00 PM
Last Updated : 17 May 2021 04:00 PM

டிஎன்பிஎல்லில் ஒரு வாரத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும்: மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி. அருகில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே உள்ளிட்டோர்.

கரூர்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒரு வார காலத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என, மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று (மே 17) நடைபெற்றது. மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்றார்.

கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் இரும்பாலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து, அங்கேயே 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைத்துள்ளது போல, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன செயல் அலுவலர் ஹரிகிருஷ்ணன், தங்கராசு, டேவிட் மாணிக்கம், சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் அமைத்த தொழில்நுட்ப அலுவலர்கள், எம்எல்ஏக்கள் (குளித்தலை) இரா.மாணிக்கம், (அரவக்குறிச்சி) ஆர்.இளங்கோ, (கிருஷ்ணராயபுரம்) சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்குக் கூடுதலாக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் இத்தாலியில் இருந்து வருவதற்கு மாத இறுதியாகும். இதனால், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜூன் 2-வது வாரமாகிவிடும். அவசர, அவசியம் கருதி, சேலம் இரும்பாலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதுடன், அங்கேயே 500 படுக்கைகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த அடிப்படையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து இங்குள்ள சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதற்கான பணிகள் நாளை (மே 18) தொடங்கி ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1.5 கி.மீட்டர் தூரத்திற்கு குழாய் அமைத்து ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும். இதற்கு ஆலை அதிகாரி ஒருவர் நோடல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் பழைய அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் நடந்து வருகிறது. வரும் 25-ம் தேதி முதல் அது செயல்பட தொடங்கும். தொடர்ந்து, அடுத்தடுத்து 7 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும்.

பாமக நிறுவனர் ராமதாஸ், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர், மின் நுகர்வோரிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10-ம் தேதி மின் நுகர்வோரிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாதாந்திர மின் கணக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்த படிப்படியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 250 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜனுடன்கூடிய தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 50 என, 300 ஆக்சிஜனுடன் கடிய படுக்கைகள்உள்ளன. இவை 70 ஆக அதிகரிக்கப்பட்டு, இனி ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை 300, ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 70 என 370 ஆக உயர்த்தப்படுகிறது.

மேலும், செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க ரூ.21.80 லட்சத்தில் 30 கான்சென்டிரேட்டர்கள் வழங்கப்படுகின்றன. அதில், முதற்கட்டமாக 20 கான்சென்டிரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x