

மருத்துவமனையில் படுக்கை இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும், கூடுதலானோர் வந்தால் வெளியே அனுப்பாமல் தரையில் படுக்க வைத்தாவது சிகிச்சை தருகிறோம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுவையில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. கதிர்காமம் அரசு கரோனா மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. நோயாளிகளைத் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்தவர்கள் உடலை உடனடியாக அகற்றவில்லை எனப் பலவித குற்றச்சாட்டுகள் எழுந்தன. சுயேச்சை எம்எல்ஏ நேரு தரப்பினர் மருத்துவமனைக்குள் சென்று இது தொடர்பாகப் பார்த்து இக்குறைகளை வீடியோ, படங்களாகவும் வெளியிட்டனர்.
இதனையடுத்து ஆளுநர் தமிழிசை இன்று கதிர்காமம் மருத்துவமனையில் பாதுகாப்புக் கவச உடை (பிபிஇ கிட்) அணிந்து கள ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் சென்று சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தார். உணவு, மருந்து சரியாக வழங்கப்படுகிறதா? என்ன தேவைகள் உள்ளன? நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகள், டாக்டர்களிடம் தமிழிசை கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை கூறியதாவது:
"ஆளுநர் பொய் சொல்வதாகக் கூறுகிறார்கள். யாரிடமும் நற்சான்றுக்காக நான் பணி செய்யவில்லை. எனது மருத்துவ அனுபவம், கரோனாவை நிர்வகிக்க உதவுகிறது. மனசாட்சிப்படி மக்களுக்கு நல்லது செய்யவே பணி செய்கிறோம். பொய் சொல்வதாக யாரும் சான்றிதழ் தர உரிமையில்லை.
நாங்கள் சத்தியத்தின் மீது பிறந்து சத்தியத்தில் வளர்ந்து, சத்தியத்தில் பணிபுரிகிறோம். அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் 300 ஆக்சிஜன் படுக்கைகளும், அரசு பொதுமருத்துவமனையில் 250 ஆக்சிஜன் படுக்கைகளும் தயாராகி வருகின்றன. மருத்துவமனை வந்து படம் எடுப்பவர்களை விட, செவிலியர்களும், மருத்துவர்களும் முக்கியமானவர்கள்.
இறந்த சடலங்கள், நோயாளிகள் மத்தியில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இறப்பது வரை அவர்கள் நம் சகோதர, சகோதரிகள்தான். கரோனாவுக்கு வழிமுறை இருக்கிறது. சடலத்தை உடனே வெளியே எடுத்து வந்தால் பரவிவிடும். அங்கே வைத்து சடலத்தைச் சுற்றி எடுத்து வருகிறார்கள். தற்போதுகூட ஒருவர் இறந்ததைப் பார்த்து விசாரித்தேன். எடுத்துச் செல்ல உள்ளதாகக் குறிப்பிட்டவுடன் வணக்கம் தெரிவித்து வந்தேன்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் படுக்கை இல்லை என வெளியே அனுப்பவில்லை. படுக்கை இல்லை என அனுப்பாமல் தரையில் படுக்கவைத்து சிகிச்சை தருகிறோம். படுக்கை இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும். கூடுதலானோர் வந்தால் வெளியே அனுப்பாமல் சிகிச்சை தருகிறோம். கட்டமைப்பை முன்பே சரிசெய்து இருக்க வேண்டும். அதைத் தற்போது சரி செய்கிறோம். சில நேரங்களில் சிறு பிரச்சினை வரலாம். உட்கார வைக்கும்போது ஆக்சிஜனுடன்தான் அமர வைத்தோம். தவறு நடந்திருந்தால் சரி செய்யப்படுகிறது.
ஆய்வின்போது நோயாளிகள் குறை கூறவில்லை. பணியில் இருந்தோர்தான் ஊதியம் உள்ளிட்ட குறைகளைத் தெரிவித்தனர். கோரிக்கைகளைச் சரி செய்வேன். தற்போது செவிலியர்களில் 100 பேரும், மருத்துவர்களை எடுத்துள்ளோம். பற்றாக்குறை இல்லை.
நானும் 24 மணி நேரமும் இந்தச் சிந்தனையில் இருக்கிறோம். யாரும் எனக்குச் சான்றிதழ் தரவேண்டியதில்லை. விமர்சனங்களைத் தாண்டப் பழக்கப்பட்டவள். மக்களுக்கு அவநம்பிக்கை வரக்கூடாது என்பதே எனது கருத்து. தனியார் மருத்துவக் கல்லூரியில் 3000 படுக்கைகளைக் கையகப்படுத்தியுள்ளோம். அனைத்து இடங்களிலும் ஆக்சிஜன் படுக்கையும் அதிகப்படுத்தியுள்ளோம். ரெம்டெசிவிர் மருந்து போதிய அளவு உள்ளது. பொய் சொல்லவில்லை.
பிபிஇகிட் இல்லாமல் மருத்துவமனைக்குள் வந்த எம்எல்ஏ, அவருடன் வந்தோர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். புதுச்சேரியில் 14 லட்சம் மக்கள் உள்ள சூழலில் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆயிரம் படுக்கைகள்தான் இருக்கும். பேரிடர் காலத்தில் படுக்கை கிடைக்காத பிரச்சினை பல மாநிலங்களில் உள்ளது. இது வைரஸ். வைரஸைத் தடுப்பதற்கு பதிலாக சில படங்களை எடுத்து அதை வைரலாக்குகிறார்கள். இரண்டும் கெடுதல். எனக்கு அதைப் பற்றிப் கவலையில்லை. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பயத்தை ஏற்படுத்தாதீர்கள்".
இவ்வாறு ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்தும் ஆளுநரிடம் அங்கு பணிபுரியும் பலரும் தங்கள் குறைகளை நேரடியாகத் தெரிவித்தனர்.