Last Updated : 28 Dec, 2015 05:38 PM

 

Published : 28 Dec 2015 05:38 PM
Last Updated : 28 Dec 2015 05:38 PM

சுற்றுச்சூழலை காக்க மீனவர்களுக்கான சோலார் மூன்று சக்கர வாகனம்: குமரி கடற்கரை கிராம மக்கள் வரவேற்பு

சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சோலார் மூன்று சக்கர வாகனம், மீனவர்கள் மற்றும் மீன்விற்பனை செய்யும் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த வாகனத்தை கன்னியாகுமரியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமமான ஆரோக்கி யபுரத்தில் மீனவர்களிடையே அறிமுகப்படுத்தும் வகையில், இந்த வாகனத்தை மாணவர்கள் நேற்று இயக்கிக் காண்பித்தனர். மீன்விற்பனை செய்யும் பெண்களின் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் 700 கிலோ மீன்களை இந்த வாகனத்தில் கொண்டு செல்ல முடியும். இதில், ஓட்டுநர் உட்பட 3 பேர் பயணம் செய்ய முடியும்.

வாகனம் இயங்கும் முறை குறித்து ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மீனவர்களும், மீன்விற்பனையில் ஈடுபடும் பெண் களும் ஆர்வமுடன் கேட்டறிந்தனர். சோலார் மூன்று சக்கர வாகனத்தை தலைவர் ஆன்சல் மற்றும் மீனவர்கள் இயக்கிப் பார்த்தனர்.

30 கி.மீ. வேகம்

வாகனத்தை வடிவமைத்த கல்லூரி மாணவர்கள் கூறும்போது, “இந்த மூன்று சக்கர சைக்கிள் வாகனம் 30 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. பேட்டரியில் சூரிய ஒளியை சேமித்து வைத்து பயன்படுத்துவதால் சூரிய ஒளி இல்லாத மழைநேரங்களிலும் இந்த வாகனத்தை இயக்க முடியும். மோட்டார் வாகன சட்டப்படி இந்த வாகனத்துக்கு பதிவு அவசியம் என்றாலும், இதன் குறைந்த வேகம் காரணமாக விதிவிலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வாகனத்தை வாங்க கடற்கரை கிராம மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்” என்றனர்.

2016-ம் ஆண்டுக்குள் விற்பனை

சோலார் மூன்று சக்கர வாகனம் இயங்கும் முறை குறித்து விளக்குவதற்காக ஆரோக்கியபுரத்தில் தொடங்கி நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களுக்குச் செல்ல மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வாகனத்தை வரும் 2016-ம் ஆண்டுக்குள் விற்பனைக்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக தற்போது குமரி மாவட்ட கடற்கரையோர மக்களிடையே இந்த வாகனத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில், தமிழகத்தின் பிற கடற்கரை கிராமங்களிலும் சோலார் மூன்று சக்கர வாகனங்களை மீனவர்களுக்கு இயக்கிக் காண்பிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x