

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடிய பிறந்து ஒருநாளே ஆன ஆண் குழந்தைக்கு, மறுநாளே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பிழைக்க வைத்துள்ளனர்.
மதுரை மேலவெளி வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (34). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அழகேஸ்வரி. இவர்களுக்கு, கடந்த நவ. 21-ம் தேதி தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சிறிது நேரத்திலேயே இந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தொடர்ந்து வாயில் இருந்து நுரை வந்துள்ளது. மருத்துவர்கள் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்ததில், குழந்தையின் உணவுக் குழாய்கள் சரியாக அமையாமல், இருபுறமும் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை மூலம் உணவுக் குழாயை சரி செய்ய ரூ. 2 லட்சத்துக்கு மேல் செலவாகும் என்றும், சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால் குழந்தை உயிர் பிழைப்பது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை உடனே அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் பி. ஹேமந்த்குமார், மருத்துவ நிபுணர்கள் என். கருப்பசாமி, ஆர். ஸ்ரீனிவாசகுமார் குழுவினர் குழந்தையை பரிசோதித்தனர். குழந்தையின் மேல் உணவுக் குழாயிலும், கீழ் உணவுக் குழாயிலும் அடைப்பு ஏற்பட்டு, இரைப்பைக்கு உணவு செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
அதனால், தாமதிக்காமல் பிறந்து ஒருநாளே ஆன அக்குழந்தைக்கு மறுநாள் நவ. 22-ம் தேதியே அறுவைச் சிகிச்சை செய்தனர். மூன்றரை மணி நேரம் நடந்த சிகிச்சையில் உணவுக் குழாய் அடைப்பை நீக்கியதால் தற்போது அக்குழந்தை நலமுடன் உள்ளது.
இதுகுறித்து மருத்துவர் பி. ஹேமந்த்குமார் கூறியதாவது: 50 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உணவுக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. கடந்த காலத்தில், இதற்கு நுணுக்கமான நவீன சிகிச்சைகள் இல்லை. அதனால், இதுபோன்ற உணவுக் குழாய் சிக்கல் ஏற்படும் குழந்தைகளை பிழைக்க வைப்பது கடினம். இந்தக் குழந்தைக்கு பிறவியிலேயே உணவுக் குழாய்கள் சரியாக அமையவில்லை. மேலே உள்ள உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மார்பு பகுதியுடன் இணைந்திருந்தது. கீழே உள்ள உணவுக் குழாய் இரைப்பைக்குச் செல்லாமல் நுரையீரலுடன் இணைந்திருந்தது. அதனால், நுரையீரலுக்குச் செல்ல வேண்டிய காற்று இரைப்பைக்குச் சென்றதால் இரைப்பை வீங்கியது. இரைப்பைக்குச் செல்ல வேண்டிய உணவு அங்கு செல்லாமல் வாய் வழியாக நுரை தள்ளியது.
குழந்தையின் மார்பு பகுதியை பிளந்து அறுவைச் சிகிச்சை மூலம் உணவுக் குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்பைத் திறந்து நவீன சிகிச்சை முறையில் மேல் உணவுக் குழாயையும், கீழ் உணவுக் குழாயையும் இணைத்தோம். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது.
கடந்த ஓராண்டில் இதுபோன்ற சிகிச்சைக்கு 28 குழந்தைகள், மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தன. இவற்றில் 4 குழந்தைகள் இறந்துவிட்டன. நவீன சிகிச்சைகள் வந்துவிட்டாலும், இதுபோன்ற குறைபாடுள்ள 100 குழுந்தைகளில் 70 சதவீதம் குழந்தைகளையே காப்பாற்ற முடிகிறது என் றார். டீன் வைரமுத்துராஜூ, கண்காணிப்பாளர் வீரசேகரன் உடன் இருந்தனர்.
தென் தமிழகத்தில் முதல் முறையாக...
இதய அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவ நிபுணர் ஏ. ரத்தினவேல் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு கோவிலூரைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் ராஜா (36), இதய வலியால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொதுவாக, இதயத்தில் நல்ல ரத்தத்தை ஒழுங்குபடுத்தி சுத்திகரிக்கும் பெரிய மகா தமனியில் குழாய் போன்று அமைந்திருக்கும் அசன்டிங் அயோட்டா 2.5 செ.மீ. அகலம் இருக்க வேண்டும். இவரது அசன்டிங் அயோட்டா 8 செ.மீ. அகலத்தில் அசாதாரணமாக இருந்தது.
அதுபோல, இதயத்தின் கீழ் பகுதி தமனியில் அமைந்திருக்கும் திறந்து மூடும் அயோட்டிங் வால்வு சாதாரணமாக 2.3 செ.மீ. அகலம் இருக்கும். இவருக்கு 5.6 செ.மீ. இருந்தது. மருத்துவ உலகில் இது மிகவும் அபூர்வமானது. இந்த அசன்டிங் அயோட்டா குழாயையும், அசன்டிங் அயோட்டிங் வால்வையும் அறுவை சிகிச்சை முறையில் ஒரே நேரத்தில் அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக, அதே இடத்தில் செயற்கை முறை குழாய், வால்வை வெற்றிகரமாக பொருத்தினோம். தற்போது அவர் நலமாக உள்ளார். தென் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், முதல் முறையாக மதுரை மருத்துவமனையில் இந்தவகை அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்றார்.