

பூண்டி துளசி அய்யா வாண்டையார் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தி:
“துளசி அய்யா வாண்டையார் இயற்கை எய்திய செய்தி அறிந்து, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தஞ்சைத் தரணியில், காங்கிரஸ் பேரியக்கத்தைத் தொடங்கித் தோள்கொடுத்து வளர்த்த முன்னோடிகளுள் ஒருவரான அவர், காமராஜருக்கு நெருக்கமானவர். காந்தியின் தொண்டர்.
நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்தபோது, ஒருநாள் கூடத் தவறாமல், நாடாளுமன்றம் சென்று, நூற்றுக்கு நூறு வருகையைப் பதிவு செய்தவர். எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டாலும், நேர்மையாகவும், தனித்தன்மையோடும் செய்து முத்திரை பதித்தவர். பெருநிலக்கிழார் என்றபோதிலும், எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு உழைத்தார்.
பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர் சேர்க்கையில், நன்கொடை எதுவும் வாங்கக்கூடாது என விதி வகுத்தார். தமது வருவாயின் பெரும்பகுதியை, அக்கல்லூரியின் வளர்ச்சிக்காகச் செலவிட்டார். பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றினார். அவர் எண்ணற்ற ஆய்வு நூல்களை, தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி இருக்கின்றார். அவருடன் இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று, அவரது திறன் ஆய்வுரையைக் கேட்டு வியந்து இருக்கின்றேன்.
94 வயதான அவர், நூறாண்டு கடந்து வாழ்வார் என்று கருதி இருந்தேன். அவரது மறைவு, ஆற்ற இயலாதது. பழம்பெரும் தலைவர்களை, அண்மைக்காலமாக இழந்து கொண்டே வருகின்ற அதிர்ச்சியை, தாங்குவது அல்லாமல், வேறு வழியின்றி, தவிக்கின்றது தமிழ்நாடு. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரால் பயன் பெற்றவர்களுக்கும், மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”.
இவ்வாறு வைகோ இரங்கலில் தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தி:
“முதுபெரும் காங்கிரஸ் தலைவர் துளசி அய்யா வாண்டையார் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும், தஞ்சை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர். அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மிகச்சிறந்த அறிஞர், ஆன்மிகவாதி. பழகுவதில் இனிய பண்பாளர்.
காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சியில் பெரும்துணையாக இருந்த துளசி அய்யா வாண்டையார் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்து இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல்:
''தமிழகத்தில் மூத்த தலைவர், சிறந்த கல்வியாளர், தஞ்சை மாவட்டம் பூண்டி துளசி அய்யா வாண்டையார் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
பாரம்பரிய குடும்பத்திற்குச் சொந்தக்காரர், தஞ்சை மாவடத்தினுடைய காங்கிரஸ் கட்சியின் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினராக, மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். தன்னுடைய கல்விச் சாலையின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உயர்வை ஏற்படுத்தியவர். மறைந்த மூப்பனாரின் குடும்பமும், ஐயா வாண்டையாரின் குடும்பமும் அன்போடு பழகக்கூடியவர்கள்.
மறைந்த ஐயா வாண்டையார் தேசியவாதி மட்டுமல்ல காந்திய வழியில் சிந்தித்துச் செயல்பட்டு அதன் அடிப்படையிலே தன்னுடைய இறுதி மூச்சுவரை நேர்மை, எளிமையைக் கடைப்பிடித்தவர்.
அவரது மறைவு தஞ்சை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தினருக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.