Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

தீவிரவாதத்தை ஆதரித்து பதிவிட்ட விவகாரம்; மதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: மடிக்கணினி உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்ட மதுரையைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்றுசோதனை நடத்தினர். அங்கு மடிக்கணினி உட்பட 16-க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றியதாக போலீஸார் தெரிவித்தனர்.

மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது இக்பால் என்ற செந்தில்குமார். இவர் ஓராண்டுக்கு முன்பு ‘தூங்கா விழிகள் இரண்டு’ என்ற தனது முகநூல் பக்கத்தில் தீவிரவாத கருத்துகளை ஆதரித்து சிலகருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு உள்ளிட்ட ஓரிருஇஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும் சில கருத்துகளை பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மதுரை திடீர் நகர் போலீஸார் கடந்த டிசம்பர் 2-ம்தேதி வழக்கு பதிவு செய்து இக்பாலை கைது செய்தனர். இந்த வழக்குநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, இக்பாலிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த தகவல்கள் அடிப்படையில் அவருடன் தொடர்புடைய மதுரை காஜிமார் தெரு, மஹபூப்பாளையம், கோ.புதூர், பெத்தானியாபுரம் ஆகிய 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு விசாரணை நடத்த திட்டமிட்டது. இந்நிலையில், நேற்று மதுரைக்கு வந்த8 பேர் அடங்கிய என்ஐஏ குழுவினர், நான்கு இடங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்தப் பகுதியில் சந்தேகப்படும் நபர்களின் அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் மடிக்கணினி, ஹார்டு டிஸ்க், மொபைல் போன்கள், மெமரி கார்டு, சிம் கார்டு, பென் டிரைவ், தடை செய்யப்பட்ட புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் உட்பட 16 வகையான ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும், அந்த ஆவணங்களின் அடிப்படையில் இக்பாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்ததாகவும் போலீஸார் கூறினர்.

இதனிடையே, என்ஐஏ செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியதற்காக இக்பால் என்பவரின் ‘தூங்கா விழிகள் ரெண்டு காஜிமார் தெரு’ என்ற முகநூல் பக்கத்தில் உள்ள பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. பல்வேறு மதக் குழுக்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் அந்தமுகநூல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருப்பூரில் விசாரணை

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த நசீருதீன் என்பவர், இக்பாலுடன் அரபி கல்லூரியில் படித்தவர் என்பதுடன், இக்பாலின் வாட்ஸ்அப் குழுவில் அங்கம்வகித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொச்சியில் இருந்து ஆய்வாளர் காந்த், உதவி ஆய்வாளர் உமேஷ் உள்ளிட்டோர் அடங்கிய 4 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை திருப்பூர் வந்து, மாநகர காவல் துறையினர் உதவியுடன் நசீருதின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலிருந்து அலைபேசி ஒன்றை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x