Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு: தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர் சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைபிறப்பித்தார். அதில் ஒன்றாக ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என அறிவித்தார். இந்த விலை குறைப்பு இன்றுமுதல் (நேற்று) அமலுக்கு வருகிறது. பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், நந்தனம் ஆவின் தலைமை அலுவகத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் ஆவின்பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து ஆவின் பால் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைக்கான வித்தியாசதொகையை அடுத்த மாதம்பால் அட்டை விற்பனை செய்யும்போது ஈடு செய்யப்படும். மேலும்,தற்போது ஊரடங்கு அமலில்உள்ள நிலையில் இணையதளசேவையான Zomato, Dunzoமூலம் பொதுமக்களுக்கு சென்னை முழுவதும் எவ்விததடையுமின்றி பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பால் விநியோகம் தங்கு தடையின்றி நடப்பதை கண்காணிக்க நந்தனம் ஆவின் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 044-23464575, 23464576, 23464578 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004253300.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய விலை விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய விலை)

சமன்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் சில்லறை விலை 20, அட்டைக்கு ரூ.18.50 (21.50),

நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் சில்லறை விலை ரூ.22, அட்டைக்கு ரூ.21 (23.50),

நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் சில்லறை விலை ரூ.24, அட்டைக்கு ரூ.23 (25.50),

இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் சில்லறை விற்பனை ரூ.18.50, அட்டைக்கு ரூ.18 (20).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x