Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்ய இன்று காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம்: ராஜேஷ்குமாருக்கு அதிக ஆதரவு என்று தகவல்

சென்னை

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக, அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (மே 17) நடைபெறுகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வென்றது. இந்நிலையில், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவர் தேர்வு குறித்து ஆலோசிப்பதற்காக, அக்கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு கடும் போட்டிநிலவியதால், கட்சி மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.

மாநிலங்களவை எதிர்க் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,புதுச்சேரி மக்களவை உறுப்பினர்வைத்திலிங்கம், மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழககாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் எம்.பி.க்கள், தேசிய செயலர்கள்,மாநில முன்னாள் தலைவர்களும்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ள னர்.

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 18 பேரில் 11 பேர் முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளனர். கு.செல்வபெருந்தகை (பெரும்புதூர்), ஏ.எம்.முனிரத்தினம் (சோளிங்கர்), ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), எஸ்.விஜயதரணி (விளவங்கோடு), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), ஆர்.கணேஷ் (உதகமண்டலம்), எஸ்.ராஜ்குமார் (மயிலாடுதுறை) ஆகியோர் ஏற்கனவே எம்எல்ஏ-க்களாக இருந்தவர்கள்.

தலைவர் பதவிக்கு செல்வபெருந்தகை, ஏ.எம்.முனிரத்தினம், விஜயதரணி, பிரின்ஸ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தென் மாவட்டங்களில் காங்கிரஸின் வாக்கு வங்கியாக கிறிஸ்தவ நாடார் சமூகம் உள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக, இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்த விஜய் வசந்த் இருப்பதால், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியை கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தலித் பிரதிநிதிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே, வைத்திலிங்கம் ஆகியோர் 18 எம்எல்ஏ-க்களிடம் தனித் தனியாக கருத்து கேட்க இருப்பதாகவும், அதிக எம்எல்ஏ-க்கள் ஆதரவளிக்கும் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் `இந்து தமிழ்' நாளிதழிடம் தெரிவித்தார். கிள்ளியூர் தொகுதியில் இருந்து 2-வது முறையாக எம்எல்ஏ-வாகியுள்ள ராஜேஷ்குமாருக்கு அதிக எம்எல்ஏ-க்களின் ஆதரவுஇருப்பதாகவும், அவர் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x