தொலைக்காட்சிகளில் கரோனா விழிப்புணர்வு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தொலைக்காட்சிகளில் கரோனா விழிப்புணர்வு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Updated on
1 min read

கரோனா 2-வது அலை பாதிப்புஅதிகமாக இருக்கும் நிலையில்,தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களிடம் அரசு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதல்வர் கூறியதாவது: கரோனா தடுப்பு பணிகளில் அரசு வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. அதை அவ்வாறேசெய்தியாக வெளியிட வேண்டும். இதில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால், அரசு அதிகாரிகளிடம் கேட்டு அதையும் சேர்த்து செய்தியாக வெளியிட வேண்டும்.

தொலைக்காட்சி நாடகங்கள், செய்திகள் ஒளிபரப்பப்படும்போது ‘முகக்கவசம், உயிர்க் கவசம்’, ‘சமூக இடைவெளி காப்போம், உறவுகளுடன் வாழ்வோம்’, ‘அவசியமின்றி வெளியே வர வேண்டாம், அருகே மரணத்தை அழைக்கவேண்டாம்’ என்பன உட்பட 16வகையான விழிப்புணர்வு வாசகங்களை ஒளிபரப்ப வேண்டும்.

அதேபோல, தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது, ‘கபசுரக் குடிநீர் அருந்துவோம், கரோனாவை தடுப்போம்’, ‘நிலவேம்பு குடிநீர் அருந்துவோம், நீண்ட ஆயுளைப் பெறுவோம்’, ‘நீராவி பிடிப்போம், கரோனா வைரஸை தடுப்போம்’ என்பன உள்ளிட்ட 13 வகையான கரோனாதடுப்பு விழிப்புணர்வு வாசகங்களை தவறாமல் அடிக்கடி ஒளி, ஒலிபரப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

3.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்

ஊடகத்தினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 3.50 கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து விமானப் படை விமானங்கள் மூலம் திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட உள்ளது.

சிங்கப்பூரில் இருந்து 1,900 காலி சிலிண்டர்கள் வாங்குவதற்கு சிப்காட் மூலமாக ஆர்டர் போடப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு வந்த 500 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரம்பும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்பாக ஈடுபட்டாலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதை சரியாக அவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். செய்திகளை முழுமையாக வெளியிடுவதுடன், மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிட வேண்டும். ஊடகவியலாளர்கள் அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in