

பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிஏபி தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்புபகுதிகள் மற்றும் ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று அணையின் நீர்மட்டம் 92.85 அடியாக உயர்ந்தது.
இந்தாண்டு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,பொதுப் பணித்துறையினரும் அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தனர். இந்நிலையில், ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு நேற்று தண்ணீர்திறக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, "பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து அக்டோபர் 15-ம் தேதி வரை 153 நாட்களுக்கு நீர் இருப்பைப் பொறுத்து 1,205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பாசனத் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படும். இதனால், ஆனைமலை டெல்டா பகுதியிலுள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" என்றனர்.
செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, ஆழியாறு அணை உதவிப் பொறியாளர் மாணிக்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடுமலை
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணையில் நேற்று நடைபெற்ற தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். பொத்தானை அழுத்தி ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் மதகை திறந்து விட்டார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, "அணையின் மூலமாக சுமார் 55,000 ஏக்கர்பாசனம் பெறுகிறது. புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளுக்கு குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1,728 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும். ஆற்றில் 80 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்" என்றனர்.