

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள ‘டவ் தே’ புயல் காரணமாக, காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 146 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள, ‘டவ் தே’ புயல் காரணமாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நேற்று திடீரென நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் விநாடிக்கு 398 கனஅடியாக இருந்த நீர்வரத்துநேற்று 2 ஆயிரத்து 146 கனஅடியாக அதிகரித்தது.அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 97.67 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 97.74 அடியாக உயர்ந்தது. 61.86 டிஎம்சியாக இருந்த நீர் இருப்பு 61.95 டிஎம்சி-யானது.
ஒகேனக்கல்லிலும் அதிகரிப்பு
இதேபோல, புயல் காரணமாக தமிழக மற்றும் கர்நாடகா காவிரி வனப்பகுதியில் பெய்த மழையால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3,000 கன அடியாக அதிகரித்தது.புயல் காரணமாக காவிரி ஆற்றையொட்டிய அடர் வனப்பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் மழை அதிகரித் தால், ஒகேனக்கல்லுக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப் புள்ளது.