

சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் 400 இடங்களில் நடத்தப்படும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாநகராட்சி ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களைக் கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக, கடந்த ஆண்டு மே 8-ம் தேதி முதல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் தலா இரு காய்ச்சல் முகாம்கள் வீதம் 400 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 324 முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் மூலம் 65 லட்சத்து 92 ஆயிரத்து 859 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 லட்சத்து 46 ஆயிரத்து 773 பேருக்கு கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சல் சிறப்பு முகாம்களில் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யப்படும். காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம், கரோனா வைரஸ் தொற்று பாதித்தவரைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, தொற்று பரவலைக் கட்டுபடுத்த முடியும்.
இந்த முகாம்களில் மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர் ஆகியோர், மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள கள ஒருங்கிணைப்பு அலுவலர்கள், இந்த முகாம்களை கண்காணித்து வருகின்றனர்.
எனவே, கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு சென்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.