Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

950 வெளிமாநில தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்கி சொந்த ஊர்களுக்கு அனுப்பிய மாநகராட்சி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருந்த வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் தங்குமிடம், உணவு வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. 15-ம் தேதி முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு பயணச் சீட்டுகளுடன் கிடைத்த வாகனங்களில் சென்னை சென்ட்ரலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ரயில்களில் சொந்த ஊர் செல்ல வேண்டியுள்ளது.

ஊரடங்கு காரணமாக அவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளர்களை நேரு விளையாட்டரங்கம் அருகில், கண்ணப்பர் திடல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் செல்ல வேண்டிய ரயில் புறப்படும் நேரத்தில், மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் அழைத்து சென்று ரயிலில் ஏற்றப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கடந்த 5 நாட்களில் 950 பேர் பயன்பெற்றுள்ளனர். இவர்களில் முன்பதிவு பயணச்சீட்டு இல்லாத 26 பேருக்கு, அவரச ஒதுக்கீட்டின் கீழ், தொழிலாளர்களின் செலவில் பயணச்சீட்டையும் வாங்கிக் கொடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உதவியுள்ளனர். இப்பணிகளை மாநகராட்சி துணை ஆணையர் ஜெ.மேகநாதரெட்டி, மாநகர வருவாய் அதிகாரி சுகுமார் சிட்டிபாபு, கூடுதல் வருவாய் அதிகாரி லோகநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x