

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உயிரிழப்புக்கு மூச்சுத்திணறல்தான் காரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் 2-ம் அலை பரவலில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் உள்ள 250 இருக்கைகளில், தீவிர சிகிச்சைக்கான இருக்கைகள் 80 உட்பட 200 ஆக்சிஜன் இருக்கைகளும் நிரம்பியுள்ளன.
ஆகவே, திருவள்ளூர் அருகே உள்ள இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா சிகிச்சைக்காக படுக்கைகள் அமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இச்சூழலில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களில், 10 பேர், நேற்று முன் தினம் மாலை 6 மணி முதல், நேற்று காலை 7 மணி வரை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதில், 4 பேர், நேற்று அதிகாலை 1 மணி முதல், 3.45 மணிவரை ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் உயிரிழந்ததாக, நோயாளிகளின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ, மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. 70 வயதை கடந்த 4 பேர் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர் என்கிறது.
இருப்பினும், மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆக்சிஜன் இருக்கைகளை துரிதமாக அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.