Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM

புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளிகள் மத்தியில் உயிரிழந்தோரின் உடல்கள்: நேரில் பார்வையிட்ட எம்எல்ஏ கடும் கண்டனம்

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடல்களை, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மத்தியில் வைத்திருந்ததால் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இதை நேரில் பார்த்த எம்எல்ஏ இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 1,500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கோவிட் மருத்துவமனையான கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனோ பாதித்த ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 25 பேர் உயிரிழக்கின்றனர். தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பிணவறையில் உடல்களை வைக்கக் கூட இடம் இல்லாத சூழல் உள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில், கரோனா பாதித்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தோரின் உடல்கள் அங்கேயே பாலீத்தின் கவர்களால் சுற்றப்பட்டு, கட்டி வைக்கப்பட்டுள்ளது. இது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர் பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளி யாயின.

இந்நிலையில் நேற்று இந்த மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்ட எம்எல்ஏ நேருவிடம் இதுபற்றி கேட்டதற்கு, "மருத்துவமனை வார்டுக்குள் நேரில் சென்று பார்த்தேன். ஏற்கெனவே இறந்த ஒருவரின் உடலைக் கட்டி நோயாளிகள் மத்தியில் வைத்திருந்தனர். நான் வந்ததை பார்த்த பிறகும், மேலும் இறந்த இருவரை கட்டத் தொடங்கினர். அதை பார்த்தவுடன் சாப்பிடவே முடியவில்லை.

அரசு மக்களுக்கு தேவையான பணிகளை செய்யவி்ல்லை. ஆளுநரும், அரசும் கோவிட் பிரச்சினையில் கவனம் செலுத்துவது அவசியம்.

மருத்துவமனையில் போதிய வசதிகள் மக்களுக்கு இல்லை. மக்கள் திண்டாடுகின்றனர். அரசு கவனம் செலுத்தவில்லை. அங்கு பணிபுரிவோர் எங்களால் முடிந்த அளவுதான் செய்ய முடியும் என்கின்றனர். மருத்துவ சாதனங்கள் போதிய அளவு இல்லை. ஆக்சிஜன் படுக்கைகள் இல்லை. உரிய நடவடிக்கையில் புதுச்சேரி அரசு இறங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x