மடிக்கணினி வாங்க சேமித்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவர்கள்

அரசுப்பள்ளி ஆசிரியை முருகம்மாள், அவரது குழந்தைகள் மதுநிஷா, ரோஹித் ஆகியோர்.
அரசுப்பள்ளி ஆசிரியை முருகம்மாள், அவரது குழந்தைகள் மதுநிஷா, ரோஹித் ஆகியோர்.
Updated on
1 min read

மடிக்கணினி வாங்குவதற்காக சேமித்து வந்த தொகையை திருப்பத்தூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கும்மிடிகாம்பட்டி அடுத்த ஜீகிமரத்து கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (37). குரும்பேரி அடுத்த களர்பதி அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் மதுநிஷா (11), மகன் ரோஹித் (9). இவர்கள் 2 பேரும் கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாயார் கைசெலவுக்காக கொடுத்த பணத்தை மடிக்கணினி வாங்குவதற்காக சிறுக சிறுக சேமித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனோ பெருந்தொற்றால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த மதுநிஷா மற்றும் ரோஹித் ஆகியோர், மடிக்கணினி வாங்க சேமித்து வந்த பணம் ரூ.3,281-ஐ முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்க முடிவு செய்து, தங்களது விருப்பத்தை தன் தாயார் முருகம்மாளிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, முருகம்மாள் தன் சேமிப்பு தொகையான ரூ.10 ஆயிரத்தை சேர்த்து, தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்தனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மூலம், 13,281 ரூபாயை வழங்க ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, ஆட்சியர் சிவன் அருள் முன்னிலையில், அமைச்சர் ஆர்.காந்தியிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான தொகையை முருகம்மாள் வழங்கினார்.

மடிக்கணினி வாங்குவதற்காக சேமித்த பணத்தை முதலமைச்சரின் கரோனா நிவாரணத்துக்காக அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குழந்தைகள் வழங்க முன் வந்த செயலை அமைச்சர் ஆர்.காந்தி வெகுவாக பாராட்டினார்.

அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை (தி.மலை), கதிர் ஆனந்த் (வேலூர்), எஸ்.பி. விஜயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை) உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in