

மதுரையில் நேற்று முன்தினம் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் உயிரிழந்த நிலையில் நேற்று மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கரோனாவுக்குப் பலியானார்.
மதுரையில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் கரோனாவுக்கு அடுத்தடுத்து பலியாகும் நிலையில் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கட்சியினர் கட்டுப்பாடில்லாமல் சமூக இடைவெளி இல்லாமல் குவிவதால் அரசுத் துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
மதுரையில் கரோனா தொற்றுப் பரவலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்குப் படுக்கை கிடைக்காததுபோல், இறந்தவர்கள் உடல்களை மயானங்களில் உடனடியாக எரிக்க முடியாமல் அங்கும் வரிசை முறை பின்பற்றப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் சொற்ப அளவிலே உள்ளன. ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது அன்றாட பரிதாபக் காட்சியாக மாறிவிட்டது.
தற்போது மதுரையில் அரசுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் தினசரி நடக்கிறது. மேலும், ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிாவாரணம் தொகை வழங்கும் நிகழ்சிகள், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் ஆய்வு போன்றவையும் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு அமைச்சர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அதனால், வயதான அதிகாரிகள் இந்த நிகழ்ச்சிகளில் அச்சத்துடன் பீதியில் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக மதுரையில் அரசுத் துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் இறந்தார். நேற்று மாநகராட்சி மண்டலம் 4-ல் பணிபரியும் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் (திட்டம்) கரோனா தொற்றுக்கு உயிரிழந்தார். அவர் கடந்த சில நாட்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
அவரைப் போல், இந்த அலையில் இதுவரை 5 மாநகராட்சி அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது 10க்கும் மேற்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். அதுபோல், கரோனா பணிகளில் ஈடுபட்ட மற்ற துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டுகளில் பணிபுரியும் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் பலரும் கரோனா சிகிச்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கரோனா பணியில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் இப்படி வயது வித்தியாசமில்லாமல், பொதுமக்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் என்ற பாராபட்சமில்லாமல் கரோனா அனைவரையும் தாக்கி வருகிறது. அதனால், முகக் கவசம், தனி மனித இடைவெளி விழிப்புணர்வு பற்றிப் பேசும் அமைச்சர்கள், தாங்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கட்சியினரை அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும்.
அரசியில் கட்சியினர் வருவதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிகாாிகள், அரசு ஊழியர்கள், அமைச்சர்களிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாமலும் அந்த நிகழ்ச்சிகளைத் தவிர்க்க முடியாமலும் பரிதவிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய்த் துறை, சுகாதாரத்துறைகளில் பணிபுரியும் அரசு அதிகாரிகளில் பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ள்ளன. அதற்காக அவர்கள் மருந்து, மாத்திரைகளை எடுத்து வருகின்றனர். அதனால், கரோனா தொற்று வந்தால் என்னாகுமோ என்ற அச்சத்திலே அமைச்சர்கள், பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்,’’ என்று தெரிவித்தனர்.