

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் நிரந்தர தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மழை சேதங்களை ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 'டவ் தே' புயலால் கடல் சீற்றம் ஏற்பட்டு, மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதேபோல், கனமழையால் சுவர் இடிந்தும், மேற்கூரை சரிந்து விழுந்தும் இருவர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (மே 16) குமரியில் மழை சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அவர், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் மற்றும் அங்கு கடல் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள கடலரிப்பு சேத பகுதிகளை பார்வையிட்டார். இதேபோல், ராமன்துறை, பூத்துறை அரயான்தோப்பு, மிடாலம், இனையம் புத்தன்துறை, சின்னத்துறை, முள்ளூர்துறை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு மற்றும் மீனவ கிராமங்களில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர்; தேங்காய்பட்டணம் உட்பட தற்போது கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு கிராமங்களுக்குள் கடல் நீர்புகும் நிலையிலுள்ள பகுதிகளில், கருங்கற்கள் கொட்டி கடலரிப்பு தடுப்புகள் அமைக்கப்படும். மேலும், குமரி மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்படும் அனைத்து மீனவ கிராமங்களிலும் மக்கள் பாதிக்காதவாறு நிரந்தரமாக தூண்டில் வளைவு அமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், மழையால் ராமன்துறையில் மேற்கூரை விழுந்து இறந்த 2 வயது குழந்தை ரெஜினா, அருமனை அருகே சாரோட்டில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த இளைஞர் யூஜின் ஆகியோரின் பெற்றோரிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.
ஆய்வின்போது, எம்.பி. விஜய் வசந்த், ராஜேஷ்குமார் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், எஸ்.பி. ஸ்ரீநாத், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.