கரோனா சிகிச்சை முடிந்து நாளை புதுச்சேரி திரும்புகிறார் முதல்வர் ரங்கசாமி; வீட்டில் ஒருவாரம் தனிமைப்படுத்திப் பணிகளை செயல்படுத்த முடிவு

ரங்கசாமி: கோப்புப்படம்
ரங்கசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா சிகிச்சை நிறைவடைந்து நாளை புதுச்சேரிக்கு முதல்வர் ரங்கசாமி திரும்புகிறார். ஒருவாரம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, அரசு நிர்வாக பணிகளை செய்ய உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுவை முதல்வராக ரங்கசாமி கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். இதையடுத்து, அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, பரிசோதித்ததில் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, கடந்த 9-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் ரங்கசாமிக்கு கரோனா தொற்று தீவிரம் குறைவாகவும், உடல்நிலை சீராகவும் இருந்தது. தொடர் சிகிச்சையால் ரங்கசாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

புதுச்சேரி முதல்வர் எப்போது புதுச்சேரி வரவுள்ளார் என்று, அவரது கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, "கரோனா சிகிச்சை முடிந்து நாளை (மே 17) புதுச்சேரிக்கு ரங்கசாமி திரும்புவார். கரோனா தொற்றால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஒருவாரம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வார். கரோனா தொற்று அதிகரிப்பால், வீட்டில் இருந்தபடி பணிகளை செய்ய உள்ளார். குறிப்பாக, கரோனா தொற்று தொடர்பான பணிகளில் அதிகாரிகளை ஆய்வு செய்வார்.

அதேபோல், மருத்துவமனையில் இருந்தபோது, நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது தொடங்கி, புதிய அமைச்சரவை நியமனம், இலாக்காக்கள் ஒதுக்கீடு என, முக்கிய விஷயங்கள் தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுடன் ஆலோசிப்பார்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in