

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 200 படுக்கை வசதி கொண்ட சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும் பணியை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் கரோனா தொற்றாளர்களுக்குச் சிகிச்சை அளிக்க கரோனா சித்த மருத்துவ மையங்களைத் தமிழக அரசு திறந்து வருகிறது. மதுரை திருப்பாலையில் யாதவர் கல்லூரியில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாநகராட்சி சார்பில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தை அமைச்சர் கே.என்.நேரு நாளை திறந்து வைக்கிறார். இந்த மையத்தைத் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் தீவிரப்படுத்தியுள்ளார். மதுரையில் 2வது சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் அமெரிக்கன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா அறிகுறியுடன் வருவோர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும். இங்கு 24 மணி நேரமும் சித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பணியில் இருப்பார்கள். இந்த மையத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் உணவு வழங்கப்படும்’’ என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேல், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் ஆகியோர் உடனிருந்தனர்.