

புதுச்சேரியில் ஆக்சிஜன் படுக்கைகள் போதிய அளவு இருப்பதாக ஆளுநரும், அதிகாரிகளும் ஒருபுறம் கூறினாலும், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி்ல் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி, படுக்கையில்லாமல் தரையிலும் இருக்கையிலும் ஏராளமானோர் அமர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். சடலங்களுக்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சை தரப்படுவதாக நேரில் சென்று பார்த்த எம்எல்ஏ நேரு புகார் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இறந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து தேசிய அளவில் 2ம் இடத்தில் புதுச்சேரி உள்ளது. இந்நிலையில் நேற்று 9,446 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 1,585, காரைக்கால்- 255, ஏனாம்- 111, மாகே - 10 பேர் என மொத்தம் 1,961 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 25 பேர், காரைக்காலில் 6 பேர், மாஹேவில் ஒருவர் என இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 32 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இவா்களில் 21 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,151 ஆகவும், இறப்பு விகிதம் 1.36 ஆகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 519 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 440 பேரும், கோவிட் கேர் சென்டரில் 701 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 15,497 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 17,666 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,491 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 65,689 (77.73 சதவீதம்) ஆக உள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையும், உயர் அதிகாரிகளும் போதிய அளவில் படுக்கைகள் இருப்பதாக ஒருபுறம் கூறி வருகின்றனர். உண்மையில் ஏராளமான பொதுமக்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் படுக்கைகள் இல்லாமல் தரையிலும், இருக்கையிலும் அமர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில் இன்று சுயேச்சை எம்எல்ஏ நேரு மற்றும் அவரது தரப்பினர் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அவருடன் சென்றோர் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து வெளியிட்டதால் அங்குள்ள மோசமான சூழல் தெரியவந்தது. நோயாளிகள் தரப்பில் கூறுகையில், "சுகாதாரத் துறையினரைப் போதிய அளவு பணியில் நியமிக்க வேண்டும். இங்குள்ள ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன" என்று குறிப்பிட்டனர். இதுபற்றிச் சுகாதாரத் துறைக்கும் புகார் தெரிவிக்கப்பட்டன.
சடலங்களுக்கு நடுவே நோயாளிகள்
எம்எல்ஏ நேரு கூறுகையில், "அரசு மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யவி்ல்லை. ஆளுநரும், அரசும் கோவிட் பிரச்சினையில் கவனம் செலுத்துவது அவசியம். மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. இன்று மருத்துவமனை வார்டுக்குள் நேரில் சென்று பார்த்தேன். ஏற்கெனவே இறந்த ஒருவரின் உடலைக் கட்டி நோயாளிகள் மத்தியில் வைத்திருந்தனர். நான் வந்ததைப் பார்த்து, மேலும் இறந்த இருவரின் உடல்களைக் கட்டத் தொடங்கினர். அதை பார்த்தவுடன் சாப்பிடவே முடியவில்லை.
மக்கள் திண்டாடுகின்றனர். அரசு கவனம் செலுத்தவில்லை. உயிர் காக்கத் தேவையான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும். சடலங்களுக்கு நடுவே நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அங்கு பணிபுரிவோர் எங்களால் முடிந்த அளவுதான் செய்ய முடியும் என்றனர். சாதனங்கள் போதிய அளவு இல்லை. ஆக்சிஜன் படுக்கைகள் இல்லை" என்று குறிப்பிட்டார்.
நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள்
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக 1500க்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நோய்த்தொற்று காரணமாக நோயாளிகளுக்கு மூச்சு திணறல் அதிகளவு ஏற்படுவதால் தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகின்றது.
இதனை அடுத்து புதுச்சேரியில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 590 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பின. இதேபோன்று 137 வென்டிலெட்டர்களும் நிரம்பியுள்ளன. புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள 606 ஆக்சிஜன் படுக்கைகளும், 58 வென்டிலேட்டர்களும் நிரம்பி உள்ளன. ஆக்சிஜன் படுக்கைக்காக காத்திருக்கும் சூழல்தான் உண்மையில் உள்ளது. சிறப்புப் படுக்கைகளை அரசு மருத்துவமனைகளில் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.