

கரோனாவை ஒழிக்கப் போராடி வரும் முன்களப்பணியாளர்களின் உழைப்பு வீணாகாமல் இருக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கைத்தறித் துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 4 அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்கள், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் என மொத்தம் 16 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சுமார் 2,450 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தினசரி பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் கூடுதல் சிறப்பு சிகிச்சை மையங்களை அமைக்கவும், சித்தா சிறப்பு சிகிச்சை மையங்களை அதிகரிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எம்எஸ்டபிள்யு கட்டிடத்தில் 100 படுக்கை வசதியுடன் கூடிய சித்தா சிறப்பு சிகிச்சை மையமும், வாணியம்பாடி அடுத்த ஜெனதாபுரம் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்தா சிறப்பு சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை (தி.மலை), கதிர்ஆனந்த் (வேலூர்), மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்துப் பேசும்போது, ‘‘கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பொதுமக்களை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க அரசும், அரசு அலுவலர்களும் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். அவர்களின் உழைப்பு வீணாகாமல் இருக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆங்கில மருத்துவத்துடன், சித்த மருத்துவமும் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தி வருவதால் தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சைக்காக சித்த மருத்துவமனைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது கூடுதலாக 2 சித்த மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
நாட்றாம்பள்ளி சித்த மருத்துவமனையில் கடந்த ஆண்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நிறைய நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்ததைப் போல இப்போதும் அனைவரும் குணமடைய வேண்டும். அதேபோல, கரோனா சித்தா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க இடமளித்த கல்வி நிறுவனங்களுக்கு என் பாராட்டுக்கள். இந்த 2 சிகிச்சை மையங்களிலும் 300 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), சித்த மருத்துவர் விக்ரம்குமார், வேலூர் புற்றுமகரிஷி சித்த மருத்துவமனை மருத்துவர் பாஸ்கரன், சித்த மருத்துவர் சக்திசுப்பிரமணி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.