Last Updated : 16 May, 2021 03:41 PM

 

Published : 16 May 2021 03:41 PM
Last Updated : 16 May 2021 03:41 PM

வேலூரில் ஆட்சியர், எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று; தனியார் மருத்துவமனையில் அனுமதி

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தினசரி பாதிப்பு 600-ஐக் கடந்து வருகிறது. வேலூரில் மாநகராட்சிப் பகுதிகளில் நோய்ப் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே அதிகமாகச் சுற்றித் திரிவதால், நோய்ப் பரவல் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று ஒரே நாளில் 643 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 977 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 458 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெருகி வரும் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு கரோனா தொற்று நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வீட்டில் பணியாற்றி வரும் பெண்ணுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தன்னைதானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்குக் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோல், அணைக்கட்டு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மத்திய மாவட்டச் செயலாளருமான ஏ.பி.நந்தகுமாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. இதையடுத்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏ நந்தகுமார் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அக்கட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x