மாயமான நாகை மீனவர்களை போர்க்கால வேகத்தில் மீட்க நடவடிக்கை; ராமதாஸ் வேண்டுகோள்
கொச்சியில் மாயமான நாகை மீனவர்களைப் போர்க்கால வேகத்தில் மீட்க நடவடிக்கை வேண்டும் என்று தமிழக, கேரள அரசுகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘டவ் தே’ புயல் காரணமாக ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் மே 14-ம் தேதிகாலைக்குள் கரை திரும்புமாறு ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், கேரள மாநிலம் கொச்சியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போயினர். இவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், ’’கொச்சி அருகே அரபிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் டவ்-தே புயலில் சிக்கிக் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களை மீட்டு, காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!
புயலில் சிக்கி, காணாமல் போன மீனவர்கள் எங்கு தவிக்கிறார்கள் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில், கடலோரக் காவல் படையினரை உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுத்த தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ’’என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
