Published : 16 May 2021 02:22 PM
Last Updated : 16 May 2021 02:22 PM

ஈரோடு அருகே கரோனா பாதித்த தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகள்

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகளின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, தனது கணவர் இறந்த நிலையில், தனது மகளின் வீட்டில் வசித்து வருகிறார். மூதாட்டியின் இரு மகன்கள் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மூதாட்டிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு (மே 14) மூதாட்டி தனது மகள் வீட்டுக்கு வந்துள்ளார். கரோனா தொற்று உறுதியானதால், தனது தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மகளும், மருமகனும் மறுத்துள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த மூதாட்டி, வீட்டின் வாசலில் அமர்ந்து விட்டார். கரோனா பாதிப்பு உள்ளதால், அருகில் இருந்த யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

இது குறித்து, புன்செய் புளியம்பட்டி நகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த சுகாதார ஆய்வாளர் ஜெகதீசன் குடும்பத்தாருடன் பேசியும் பலன் அளிக்கவில்லை. காலையில் இருந்து மூதாட்டி உணவருந்தவில்லை என்பதை அறிந்த, சுகாதார ஆய்வாளர் மூதாட்டிக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு மகள் மற்றும் மருமகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து, புன்செய்புளியம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது.. அங்கிருந்து வந்த காவலர் செந்தில் என்பவர், "மூதாட்டியை ஒரு இரவுக்கு மட்டும் தங்க வையுங்கள். காலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விடுகிறோம்” என்று கூறினார். போலீஸார் வரை விவகாரம் சென்றதால் அச்சமடைந்த மகள் மற்றும் மருமகன் ஆகியோர், வீட்டின் முன்புறம் உள்ள போர்டிகோவில் தங்க அனுமதித்தனர்.

அங்கு ஒரு கயிற்றுக்கட்டில் போடப்பட்டநிலையில், காவலர் செந்தில் மூதாட்டியை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு புறப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கரோனா பாதிக்கப்பட்ட தாய், வீட்டுக்கு வெளியே கட்டிலில் உறங்க, மகள் குடும்பத்தார் கதவை மூடி உள்ளே உறங்கியுள்ளனர்.

சனிக்கிழமை காலை (மே 15) ஆம்புலன்ஸை அழைத்து வந்த நகராட்சி அதிகாரிகள், மூதாட்டியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x