

தேவைப்படுவோருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. இம்மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் சார்பில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கப்பட்டது.
பொதுமக்களின் கூட்டம் அதிகரித்ததால், சில தினங்களில் மருந்து விற்பனை அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. மேலும், மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களிலும் மருந்து விற்பனை தொடங்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களின் கூட்டம் குறையாததால், மருந்து விற்பனையை சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேற்று (மே 15) தொடங்கியது.
இந்நிலையில், சென்னை, கோட்டூர்புரத்தில் இன்று (மே 16) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் மற்றும் பல்வேறு உயர் அலுவலர்களுடன் கலந்துபேசி, தேவையற்ற வகையில் இதுபோன்ற மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில், வல்லுநர் குழுவை மிக விரைவில், இன்றோ, நாளையோ அமைத்து அவர்களின் மூலம் அறிவியல்பூர்வமான அறிவுறுத்தல்களை அனைத்து மருத்துவர்களுக்கும் விடுக்க இருக்கிறோம்" என தெரிவித்தார்.