

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நியமித்துத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான தமிழக அரசின் அரசாணை:
''தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பொறுப்பில் ஏற்கெனவே பணியாற்றி வந்த பங்கஜ் குமார் பன்சாலுக்குப் பதிலாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்''.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி, பின்னர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றப்பட்டார்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.