

சென்னையில் கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப் பட்டிருந்த சைதாப்பேட்டை டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் மீண்டும் தொடங்கி யுள்ளன. டிஎம்எஸ் பகுதியில் இருந்து மே தின பூங்கா வரையிலான மெட்ரோ பணிகள் தொடங்குவதில் இழுபறி நீடிப் பதால், மீண்டும் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 2 வழித்தடங் களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சைதாப்பேட்டையில் இருந்து மே தின பூங்கா வரை பணியாற்றி வந்த நிறுவனம் திடீரென வெளியேற்றப்பட்டது. இதனால், கடந்த சில மாதங்களாக பணிகள் முடங்கின. இதன் காரணமாக அண்ணாசாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ள புதிய நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் சைதாப் பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வரையிலான பணிகளை மேற் கொள்ள எல்என்டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனம் தற்போது பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால், டிஎம்எஸ்ஸில் இருந்து மே தின பூங்கா வரையிலான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்வதில் இழிபறி நீடிக்கிறது. இதனால், மீண்டும் டெண்டர் மூலம் நிறுவனத்தை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சைதாப்பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வரையில் எஞ்சியுள்ள பணிகளை ரூ.640 கோடியில் மேற்கொள்ள எல்என்டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நிறுவனம் பணியை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிஎம்எஸ்ஸில் இருந்து மே தின பூங்கா வரையில் எஞ்சியுள்ள மெட்ரோ ரயில் பணிகளை ரூ.700 கோடியில் மேற்கொள்ள முடிவு செய்திருந்தோம். ஆனால், மற்றொரு தனியார் நிறுவனம் ரூ.990 கோடி கேட்டுள்ளது. இதனால், எஞ்சியுள்ள பணிகளை தொடங்குவதில் இழிபறி நீடிக்கிறது. எனவே, மற்றொரு டெண்டர் மூலம் விரைவில் நிறுவனத்தை தேர்வு செய்து பணிகளை தொடங்கவுள்ளோம்’’ என்றனர்.