

பயணிகள் அவசரகால மருத்துவ வசதிகளைப் பெற மாம்பலம், தாம்பரம், திருவள்ளூர் உட்பட 10 ரயில்நிலையங்களில் அவசர கால இலவச மருத்துவ உதவி மையங்கள் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர்ரயில் நிலையங்களில் மட்டும் இலவச மருத்துவ உதவி மையங்கள் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் முதலுதவி அளிக்கத் தேவையான மருந்துகளும், சிகிச்சை முறைகளும் உள்ளன.
பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த மருத்துவ மையங்களை மேலும் முக்கிய ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த வேண்டுமென பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடந்த ஆண்டு நவ.18-ம்தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில்செய்தியும் வெளியானது.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் மாம்பலம், தாம்பரம், திருவள்ளூர், பெரம்பூர் உட்பட 10 ரயில்நிலையங்களில் அவசர கால இலவச மருத்துவ மையங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது,
‘‘பயணிகளுக்கு திடீரென ஏற்படும் காயம், மாரடைப்பு, மூச்சுத்திணறல் உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கு முதலுதவி தேவைப்படும். அத்தகைய பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான வசதிகள் சென்ட்ரல், எழும்பூர்ரயில் நிலையங்களில் உள்ளன.
இதேபோல், மாம்பலம், தாம்பரம், திருவள்ளூர், பெரம்பூர், திருத்தணி, மேல்மருவத்தூர், ஆம்பூர்,ஆவடி, செங்கல்பட்டு, அரக்கோணம் ரயில் நிலையங்களிலும் இலவச மருத்துவ உதவி மையங்கள் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைகளின் வருகையை பொறுத்து, படிப்படியாக மேற்கூறிய ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்படும்’’ என்றனர்.