‘டவ் தே’ புயலால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு: தயார் நிலையில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர்

‘டவ் தே’ புயலால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு: தயார் நிலையில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர்
Updated on
1 min read

தமிழகத்தில் ‘டவ் தே’ புயலால்பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உடனடியாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘டவ் தே’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்றுஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், புயல் குறித்த தற்போதைய நிலவரம், மழை பெய்வதற்கான சாத்தியங்கள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் எடுத்துக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, கனமழைமுதல் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் மே 14-ம் தேதிகாலைக்குள் கரை திரும்புமாறு ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தமீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள 244 மீன்பிடி படகுகளில் 162 படகுகள் கரைக்கு திரும்பியுள்ள நிலையில், மற்ற படகுகளும்கரைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

நிலச்சரிவு அபாயம் உள்ள மலை மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தினார்.

மழையால் பாதிக்கப்படுபவர்களை முகாம்களில் தங்கவைக்கும்போது, கரோனா தடுப்பு தொடர்பான எச்சரிக்கை உணர்வுடன் பணிகளை செய்யுமாறும், வருவாய்துறையினர் முழுவீச்சில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறும், அணைகளின் நீர்மட்டத்தை கண்காணிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மதுரையில் 2, கோவை, நீலகிரியில் தலா 1 என தேசிய பேரிடர்மீட்புப் படையின் 4 குழுவினரும் இதுதவிர, தமிழ்நாடு பேரிடர்மீட்புக் குழுவினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் அந்த குழுவினரைக் கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வருவாய் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பொதுத் துறைசெயலர் டி.ஜெகந்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in