தொழில்நுட்ப கோளாறால் ஸ்டெர்லைட்டில் உற்பத்தி நிறுத்தம்; 12 ஆக்சிஜன் கன்டெய்னர்கள் சீனாவில் இருந்து வருகை: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

தொழில்நுட்ப கோளாறால் ஸ்டெர்லைட்டில் உற்பத்தி நிறுத்தம்; 12 ஆக்சிஜன் கன்டெய்னர்கள் சீனாவில் இருந்து வருகை: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் எதிர்பாராத தொழில்நுட்பக்கோளாறுகளால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சீனாவில் இருந்து 12 ஆக்சிஜன் கன்டெய்னர்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சிவகாசிஅருகே உள்ள செங்கமலநாச்சியார் புரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து நமக்கு வரவேண்டிய 40 மெ.டன் ஆக்சிஜன் தடைபட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. அது 3 நாளில் சரிசெய்யப்பட்டு தேவையான அளவு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும்.

தற்போது போர்க்கால அடிப்படையில் எங்கெங்கெல்லாம் ஆக்சிஜன் கிடைக்குமோ அங்கிருந்தெல்லாம் ஆக்சிஜனை கொண்டு வருவதற்கான பணிகளை முதல்வர் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்தும் ஆக்சிஜனை பெற்று வருகிறோம். மேலும் அந்த தொழிற்சாலைகளில் கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யவும் முயற்சி செய்து வருகிறோம்.

நெதர்லாந்தில் இருந்து 4 கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 20 மெ.டன் கொண்டவை. மேலும் 40 மெ.டன் நாளை (இன்று) வரக்கூடும்.

ஜாம்ஷெட்பூர் உருக்கு ஆலையில் இருந்து 2 கன்டெய்னர்களில் 40 மெ.டன் ஆக்சிஜன் வர உள்ளது. இவை தேவையான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆக்சிஜன் தீர்ந்த கன்டெய்னர்களை அந்நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைத்து மீண்டும் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாடு மருத்துவக் கழகம் மூலமாக சீனாவில் இருந்து 12 ஆக்சிஜன் கன்டெய்னர்கள் கொண்டுவரப்பட உள்ளன. ஆக்சிஜனை பல இடங்களில் இருந்து கொண்டுவர கன்டெய்னர்கள் நமக்கு தேவைப்படுகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இரண்டு நாளில் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்கப்படும்.

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in