முழு முடக்கமாக இருந்தபோதிலும் டோக்கன் பெற்றவர்கள் மட்டும் இன்று கரோனா நிவாரணம் பெற அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

முழு முடக்கமாக இருந்தபோதிலும் டோக்கன் பெற்றவர்கள் மட்டும் இன்று கரோனா நிவாரணம் பெற அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
Updated on
1 min read

தமிழகஅரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாத்து ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை கரோனா நிவாரண உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியை முதல்வர் கடந்த 10-ம் தேதி தொடங்கி வைத்தார்.

நியாயவிலைக் கடைகளில் மே 15-ம் தேதி முதல் இத்தொகையை வழங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று முதல் நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க மே 16, 23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால், மே 16-ம் தேதியும் (இன்று) நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கெனவே டோக்கன் தரப்பட்டு உள்ளது.

எனவே, மே 16-ம் தேதிக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அப்போது, முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in