

சென்னையில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அண்ணா நகர் மண்டலத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஷெனாய்நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா நகர் மண்டலத்தில் இடம்பெற்றுள்ள வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது.
இதில், ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 50 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்டகரோனா சிகிச்சை மையங்களைஅமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மயானங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வுமேற்கொண்டு, சடலங்களை தகனம் செய்வதில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகாண திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வுக் கூட்டத்தில், எம்.பி. தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் அ.வெற்றி அழகன், இ.பரந்தாமன், மண்டல கள ஒருங்கிணைப்பு அலுவலர் எஸ்.கோபால சுந்தரராஜ், மண்டல அலுவலர் பி.எம்.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.