கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவப் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள்: உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவப் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள்: உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Updated on
1 min read

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பி உள்ளதால், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக மருத்துவப் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால், நாள்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால், நோயாளிகள் சிகிச்சைக்காக வாகனங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக, மருத்துவப் படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, “கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தெற்கு ரயில்வே சார்பில், ரயில் பெட்டிகள் மருத்துவப் படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த ரயில் பெட்டிகளை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையே 2 கி.மீட்டர் தூரம்தான் உள்ளது. எனவே, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் எளிதாக வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

அத்துடன், மருத்துவ வசதி கொண்ட ரயில் பெட்டிகளை நிறுத்துவதற்குத் தேவையான நடைமேடை வசதியும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ளது. எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், தெற்கு ரயில்வேயும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in