Published : 15 May 2021 09:47 PM
Last Updated : 15 May 2021 09:47 PM

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலைய தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் இஸ்ரோ வல்லுநர் குழு: ஓரிரு தினங்களில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜனை உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் இஸ்ரோ தொழில்நுட்பக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜனை உற்பத்தி நிலையத்தை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதன்பேரில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டை கண்காணிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது.

இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு மேலாக மூடிக்கிடந்த ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் சீரமைக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்திக்கு தயார் செய்யப்பட்டது.

அனைத்துப் பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 12-ம் தேதி இரவு தொடங்கியது. முதல் கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 டன் திரவ ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் மறுநாள் (13-ம் தேதி) இரவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஆக்சிஜனை குளிர்விக்கும் கொள்கலன் பகுதியில் இந்தg கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்தக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் இஸ்ரோ தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்தனர்.

ஸ்டெர்லைட் தொழில்நுட்ப அதிகாரிகளுடன், இஸ்ரோ குழுவினர் இணைந்து கோளாறை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எனவே, இன்னும் ஓரிரு தினங்களில் கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டு ஆக்சிஜனை உற்பத்தி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளில் எங்களுக்கு உதவுவதற்காக இஸ்ரோ தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்று நேற்று வந்துள்ளது. அவர்கள் எங்கள் குழுவினருடன் இணைந்து கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோளாறை சரிசெய்ய அவர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன்பேரில் கோளாறை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x