கூடுதலாக 4 மாவட்டங்களில் கரோனா வார் ரூம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கூடுதலாக 4 மாவட்டங்களில் கரோனா வார் ரூம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
Updated on
1 min read

சென்னையில் உள்ளதைப் போல் கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களிலும் கரோனா கட்டளை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை, தடுப்புப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 15-ம் தேதி) நடந்தது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ’’தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கரோனா கட்டளை மையம் (வார் ரூம்) உள்ளது. அந்த மையத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் கரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனைகள் விவரம், படுக்கைகள் விவரம், தடுப்பூசிகள் விவரம் போன்ற அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும். சென்னையில் உள்ளதைப் போல் கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களிலும் கரோனா கட்டளை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, ரூ.46 கோடி முன்தொகை அளித்து 15 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் 5 லட்சம் தடுப்பூசிகள் முதல் கட்டமாகத் தமிழகத்துக்கு வந்துள்ளன. அடுத்த சில நாட்களில் சென்னையில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். கோவையில் கொடிசியா சிகிச்சை மையத்துடன் சேர்த்து, மொத்தம் 5 இடங்களில் சித்தா, யுனானி, ஓமியோபதி போன்ற மருத்துவ முறைகள் கரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அம்மன் அர்ச்சுனண், பி.ஆர்.ஜி.அருண்குமார், செ.தாமோதரன், அமுல்கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா மற்றும் மருத்துவத் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in